தமிழ் வழியில் பள்ளி இறுதிவரை படித்த மாணவர்கள் ஆங்கிலம் ஒரு
பாடம் என்ற அளவிலேயே படித்திருப்பார்கள். கல்லூரியில் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டும், கல்லூரி வகுப்புகளில் பேராசிரியர்களோடு ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்னும் நிலையில், “ஆங்கிலம் - என்பதை ஒரு பாடமாக சுருக்கி அணுகியதற்குப் பதிலாக ஒரு மொழியாக ஆழமாகப் படிக்கத் தவறிவிட்டோமே..” என்று பெரும்பாலான மாணவர்கள் வருந்துவார்கள். அப்படி வருந்தியவர்களில் ஒருவர்தான் இந்நூலின் ஆசிரியர் ஷர்மிளா ஜெயக்குமார்.
ஆழமான புரிதலுடன் தான் கற்ற ஆங்கிலம் என்னும் மொழியை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எளிமையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசையின்’ ‘வெற்றிக் கொடி’ பகுதியில் ஷர்மிளா ஜெயக்குமார் எழுதியபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நூல் வடிவம்தான் ‘கொஞ்சம் Technique கொஞ்சம் English’.
நூலின் தலைப்பில் இருக்கும் Technique, ஆங்கில இலக்கணத்தை எளிமையாக அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் நூல் முழுவதும் பல நுட்பங்களாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
‘நீ’ மற்றும் ‘நீங்கள்’ என்னும் இந்த இரு வார்த்தைக்கும் ஆங்கிலத்தில் ‘YOU’ என்று மட்டுமே எழுதவேண்டும் என்பது போன்ற ஆச்சரியங்களும், புதிய புதிய வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள உதவும் ‘வார்த்தை வங்கி’, ஒவ்வொரு பாடமும் முடிந்தவுடன் அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் அட்டவணை, ஃபார்முலா அட்டவணை... என ஆங்கிலம் என்னும் மொழியைப் புரிந்துகொண்டு பயிற்சி செய்வதற்கான நுட்பங்கள் நூல் முழுவதும் அணிவகுக்கின்றன.